Saturday, 28 September 2013
Thursday, 26 September 2013
காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?
காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.
பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.
ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தை குலத்தில் பிறந்தவன் லிங்கையன். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என அழைக்கப்பட்டான். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டான். கலிங்கம் என்றால் அணை என்று பொருள். அதனால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டு பின்னாளில் காலிங்கராயன் என மருவியதாக வரலாறு. வாய்க்கால் நேராக கொண்டு சென்றால் அதிகமான வயலுக்கு பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும்.
எனவே நீர் தேங்கி நின்று வயலுக்கு பாய்ந்து நிலம் வளப்படுத்துவதற்காகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்காகவும், மேட்டுபாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. பாய்ந்தோடும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த காலிங்கராயன் கையாண்ட யுக்தி இப்போதைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.
Tuesday, 24 September 2013
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங்களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங்களாலான இந்த தீவுப் பகுதி இந்தியாவின் கடற்கரைக்கு 10 மைல் தூரத்திலும் ஸ்ரீலங்காவின் கடற்கரைக்கு 8 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் “கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இப் பிரச்னை ஒரு வழக்காக உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
1974-ஆம் ஆண்டும் பின் 1976-லும் இந்திய, இலங்கைக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது எனவும், கச்சத்தீவை மறுபடியும் இந்தியா எடுத்துக் கொள்ளும் வகையில் மேலே சொல்லப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இலங்கையின் பழங்கால பூகோள வரைபடங்கள் எதிலும் “கச்சத்தீவு’ எனும் ஒரு தீவுப் பகுதி இருக்காது. 1920-ஆம் ஆண்டு அன்றைய ஆங்கில ஆட்சியின் சென்னை ராஜதானி மற்றும் சிலோன் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் முதன் முதலாக பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளை அளந்து இரண்டு ராஜதானி பிரதேசங்களுக்கும் இடையில் உள்ள எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
1921, அக்டோபர் 24-ஆம் தேதி கொழும்பு நகரில் இதுபற்றி விவாதிக்க, கூடிய கூட்டத்தில்தான் முதன் முதலாக அன்றைய இலங்கை அரசின் உயர் அதிகாரிகளின் தலைவர் ஹார்ஸ்பர்க், வரைந்து காட்டிய இரு நாடுகளுக்கிடையிலான எல்லைக்கோட்டில் கச்சத்தீவு இலங்கைக்குள் உள்ளடங்கிய வகையில் இருந்தது. அதை ஏற்றுக் கொள்ள மறுத்த இந்திய அதிகாரிகள், ராமநாதபுரம் அரசரின் ஆளுகையின்கீழ்வரும் ஒரு தீவு கச்சத்தீவு என வாதிட்டு அதற்கான அத்தாட்சி பத்திரங்களையும் காட்டினார்கள். அன்றைய சிலோன் அரசின் உயரதிகாரிகள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மெüனமாகி விட்டனர் என்பது அந்த கூட்டத்தின் குறிப்புகளில் பதிவாகியுள்ளது.
அடுத்து, 1966-ஆம் ஆண்டு மே மாதத்தில், இதுபற்றி ஒரு பேட்டியில் அன்றைய இலங்கை அரசின் மந்திரி சபை செயலாளர் பி.பி. பெய்ரிஸ் கூறியது மிகவும் முக்கியமானது. “”நான் துணை சட்ட வரைவாளர், (டெபுடி லீகல் டிராஃப்ட்ஸ்மேன்) வேலையில் இருந்தபோது ஜாஃப்னாவின் வடக்கு மாவட்டங்களின் எல்லைக்கோட்டினை ஆராயும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது சம்பந்தப்பட்ட கோப்புகளை படித்தபோது, விக்டோரியா மகாராணி காலத்தில் ஒரு பிரகடனத்தில், கச்சத்தீவு ஜாஃப்னாவின் வடக்குப் பகுதிக்குட்பட்ட தீவு அல்ல என்றும் அது ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தம் எனவும் ஆங்கில அரசால் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது” எனக் கூறினார்.
இதை நிரூபிக்கும் வகையில் 1977-ஆம் ஆண்டிற்குமுன் இலங்கையில் நடந்த தேர்தல்களில் எந்த தொகுதியிலும் கச்சத்தீவு இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், 1974-ஆம் ஆண்டில் இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தபின், 1977-ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த தேர்தலில் ஜாஃப்னா மாவட்டத்தின் கய்த்ஸ் பாராளுமன்ற தொகுதியில் ஒரு இடமாக அது இடம்பெறத் தொடங்கியது.
சரித்திரத்தைப் புரட்டினால், 69 கடற்கரை கிராமங்களையும் பாக்ஜலசந்தியின் 11 சிறிய தீவுகளையும் உள்ளடக்கி ராமநாதபுரம் சமஸ்தானம் அன்றைய மதுரை நாயக்க மன்னர்களால் 1605-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது புரியும். இந்த 11 சிறிய தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு. ராமனாதபுரம் ராஜா கூத்தன் சேதுபதி 1622 முதல் 1635 வரை ஆட்சியிலிருந்தார். அவர் காலத்து தாமிர செப்பேடு ஒன்றில் அவரது ஆளுகைக்கு கீழ் இருந்த இந்த தீவுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் ராஜாவின் ராஜாங்க கணக்குப் பேரேடுகளில் கச்சத்தீவிலிருந்து குத்தகை வருமானம் வந்தது குறிக்கப்பட்டுள்ளது.
1767-ஆம் ஆண்டில் டச்சு கம்பெனி ஒன்று ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்த கணக்கும் உள்ளது. 1802-ஆம் ஆண்டு (ஆங்கிலேயர் காலத்தில்) இந்தியாவின் எல்லாப் பகுதிகளும் சர்வே செய்யப்பட்ட கணக்குகளும் வரைபடங்களும் இன்றும் உள்ளன. அதில் கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என குறிக்கப்பட்டுள்ளது.
1822-இல் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி ராமநாதபுரம் ராஜா சேதுபதியிடமிருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்தது. 1845-ஆம் ஆண்டில் அன்றைய சிலோன் கவர்னர் ஒரு கடிதத்தில் கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதிக்கு சொந்தமானது என குறிப்பிட்டுள்ளார்.
இதை எல்லாம் விட மேலாக 1905-ஆம் ஆண்டில் ராமநாதபுர ஜமீன் சீனிக்குப்பன் படையாச்சி கச்சத்தீவில் புனித அந்தோனியாரின் ஆலயத்தை (மீனவர்களின் தெய்வம் அந்தோணியார்) கட்டியுள்ளார். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும், தொழுகை செய்யவும் இந்த ஆலயப் பகுதி அவசியம் என்பது சீனிக்குப்பனின் எண்ணம்.
1913-ஆம் ஆண்டில் கச்சத்தீவு பகுதியில் 15 வருடங்களுக்கு கடல் சங்குகளை சேகரிக்கும் உரிமையை ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து ஆங்கிலோ இந்திய அரசின் செயலர் குத்தகை எடுத்துள்ளார். அந்தப் பதிவுப் பத்திரம் இன்றளவும் காப்பகத்தில் உள்ளது. இந்த குத்தகை 1936 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக இந்த எல்லா ஆதாரங்களையும் வைத்துப் பார்த்தால் அன்றைய இந்தியா மற்றும் சிலோன் நாடுகளை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என ஒப்புக் கொண்டு ஆட்சி புரிந்தது விளங்கும்.
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையிலிருந்த ஜமீன் பகுதிகள் இன்றைய ராமநாதபுரம் மாவட்டமாகி, தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்றாகியது.
ஆக கச்சத்தீவு எந்தக் காலத்திலும் இலங்கைக்கு சொந்தமாக இருந்ததில்லை என்பதற்கு சட்ட வழக்குகளின் மிக முக்கியமான சாட்சியமாகக் கருதப்படும் தாஸ்தாவேஜு எனப்படும் “டாக்குமென்ட்ரி எவிடன்ஸ்’ உள்ளது என்பது திண்ணம்.
பாரதத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிரிமாவோ பண்டார நாயகாவும் அன்றைய காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் கூட்டாளிகள்.
இரு நாடுகளுக்கிடையிலும் நல்லெண்ணத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் அன்றைய இந்திரா காந்தி அரசு 1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி புது தில்லியில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. அன்றைய சூழ்நிலையில் பிற்காலத்தில் மீன்வளங்கள் இந்தியக் கடலோரத்தில் வற்றிப் போய், கச்சத்தீவு பகுதியின் மீன்வளம் தென்னிந்திய மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் என இந்திய அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.
உலகெங்கிலும் இரண்டு நாடுகளுக்கு இடையே எல்லை நிர்ணயம் செய்யப்படும்போது இடையே நதியோ கடல் பகுதியோ இருந்தால் அதன் மையப்பகுதியில் எல்லைக் கோடு உருவாக்கப்படும். இப்போதும்கூட இரண்டு கிராமங்களின் எல்லை பிரிக்கப்படும்போது நடுவில் ஒரு நதி ஓடினால் நதியின் மையப்பகுதியில் கிராமங்களின் எல்லைக்கோடு வரையப்படுவது நம் மாநிலத்தில் பின்பற்றப்படும் சர்வே முறை. ஆனால் 1974-ஆம் ஆண்டு இந்திய அரசின் மிதமிஞ்சிய நல்லெண்ணத்தாலும், இலங்கை அரசுப் பிரதிநிதிகளின் சூட்சுமமான சாதுர்யத்தாலும் இந்த முறை தவிர்க்கப்பட்டது.
“இந்திய மீனவர்களும், சுற்றுலா பயணிகளும், இப்போது கச்சத்தீவுக்கு சென்று வருவது போல் சென்று வரலாம். இதற்கு தனியாக இலங்கை அரசின் விசா தேவை இல்லை’ என ஒப்பந்தத்தின் ஒரு விதி கூறுகிறது.
அதாவது இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என்று விதியில் கூறப்படவில்லை. அதை அன்றைய இந்திய அரசின் உயரதிகாரிகள் கவனிக்கவில்லை. ஆனால், இலங்கை அதிகாரிகள் மிக சாதுர்யமாக அந்த ஒப்பந்த விதியை உருவாக்கி இந்திய பிரதமரிடம் கையெழுத்து பெற்றுவிட்டனர்.
1976-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி மற்றொரு ஒப்பந்தம் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையில் கையெழுத்தாகியது.
அதன்படி, “இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடி ஓடங்களும் இலங்கையின் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கக்கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களும் அவர்களது படகுகளும் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கக் கூடாது’ என்று கூறப்பட்டது.
இதுபோன்ற ஒரு ஒப்பந்தம், இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சுமுகமான நட்புறவுடன் நடந்து கொள்ளுவதற்கு அடிப்படை என மத்திய அரசால் அப்போது பாராளுமன்றத்தில் பெருமையுடன் பறைசாற்றப்பட்டது.
அன்றைய ஜனசங்க கட்சியின் பாராளுமன்றத் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், “இது ஒப்பந்தம் அல்ல பணிந்து போதல்’ என பேசினார். அவரது வேண்டுகோளின்படி அன்றைய தமிழ்நாட்டின் ஜனசங்க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஒரு வழக்கு தொடர்ந்தார். அது சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களும் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டதால் நீதிமன்றம் கேட்டபோது தங்களிடம் அது சம்மந்தமான ஆவணங்கள் இல்லை என மாநில அரசு தெரிவித்துவிட்டது. அதனால், வழக்கு தள்ளுபடியாகி விட்டது.
ஆகவே, இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை அவர்களிடம் ஒப்படைத்தோம் என உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. அன்றைய அரசு எடுத்த நடவடிக்கையினால்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.
நூற்றாண்டை கடந்த ஏற்காடு சாலையின் வரலாறு!
‘மலை முகடுகளை தொட்டுச் செல்லும் மேகங்கள், அந்த மேகங்களை தொட்டணைத்து நிற்கும் வானுயர்ந்த மரங்கள், வழியெங்கும் வகிடுகளாய் வளைவுகள், இதயம் வருடும் இனிய காற்று’ இத்தனையும் கடந்து சென்றால் பரந்து விரிந்த ஏரி, பசுமை போர்த்திய ரோஜாத்தோட்டம், பக்கவாட்டில் அருவிகள்’ என்று காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து மனதை நிறைவடையச் செய்யும் இயற்கையின் அதிசயம் தான் ‘ஏழைகளின் ஊட்டியான’ ஏற்காடு. திருமணி முத்தாறு, வசிஷ்ட நதி போன்ற புனிதங்களின் பிறப்பிடமான ஏற்காடு மலையில் பாதை அமைக்கப்பட்டு நூறாண்டு கடந்து விட்டது. நூற்றாண்டு மகிழ்வைக் கொண்டாடும் இத் தருணத்தில் அதன் தொன்மையான வரலாற்றுப் பாதையை திரும்பிப் பார்ப்போம்.
சேலம் மாவட்டம் பாண்டிய, பல்லவ, சோழ மற்றும் ஹொய்சால ராஜ்ஜியத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. 14 வது நூற்றாண்டில் மாலிக்காப்பூராஸ் ஆட்சியின் கீழ் சேலம் மாவட்டம் நிர்வகிக்கப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு பின் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின் சேலம் கோட்டையினை ஹைதர் அலி கைப்பற்றினார். பின் திப்புசுல்தானின் தோல்விக்குப் பிறகு 1772ம் ஆண்டில் சேலம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய படைக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே 1792ல் நடந்த போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு பாராமஹால் மற்றும் சேலம் மாவட்டம் 1792ல் உருவாக்கப்பட்டது.
1801ல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டது.
பின்னர் 1808ல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட கலெக்டராக இருந்த போது சேலம் மாவட்டம் உருவாயிற்று. 1820 முதல் 1829ம் ஆண்டு வரை சேலத்தில் கலெக்டராக இருந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் காக்பர்ன் ஏற்காட்டின் தந்தையாக பாவிக்கப்படுகிறார். ஏற்காடு மலைத்தொடர் முதன் முதலாக கண் டறியப்படுவதற்கு முன்னாள் இருளடைந்த காடுகளாக இருந்தது. இவரது காலத்தில் தான் சேர்வராயன் மலைப்பகுதியில் காபி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் பயிரிடப்பட்டது. சேர்வராயன் மலைக்கு பின்னரே தமிழகத்தின் நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களுக்கும் காபி பயிரிடுவது விரிவடைந்தது. முதன் முதலில் 1827ல் சேர்வராயன் மலைப்பகுதியில் சர்வே மேற்கொள்ளப்பட்டது.
அப்பொழுது சேர்வராயன் மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. 19ம் நூற்றாண்டுகளில் யானைகளின் நடமாட்டம் இப்பகுதிகளில் இல்லை. இதனிடையில் 1836ம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த பிஷர் என்பவர் சேலம் ஜமீன்தாரின் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கு வாங்கினார். அவரைத் தொடர்ந்து சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்கள் உள்ளடக்கிய நிலங்களை பெரிய பணக்கார முதலாளிகள் வாங்க முன்வந்தனர். பாண்டிச்சேரியில் இருந்து வந்த சில பிரஞ்சுக்காரர்களும், கிறிஸ்தவர்களும் இதில் அடக்கம். இவர்களுடன் ஏற்காடு பகுதியில் குடியேறிய கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையினர் ஆவர்.
முதுமலை யானை முகாம் உருவானது எப்படி?
கோடை காலத்தில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் முதுமலைக்கு போகாமல் திரும்ப மாட்டார்கள். அங்கு நடக்கும் யானை சவாரி பிரபலமானது. காட்டு யானைகளை கண்டாலே தொடை நடுங்கி ஓடும் நமக்கு, இந்த யானைகளை கண்டால் வருடி பார்க்க தோன்றும். கொஞ்சம் கூட பயம் வராது. இயல்பாக காட்சியளிக்கும். இதற்கு காரணமே முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தான்.
முதுமலை யானை முகாம் தோன்றியதில் ஒரு வரலாற்று பின்னணியே உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனப்பகுதியில் மரங்களை வெட்டி எடுத்து செல்லும் பணிகளுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரங்களை கொண்டு செல்லும் யானைகள் தினமும் ஓய்வெடுப்பதற்கு 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமில் பராமரிக்கப்பட்ட யானைகளுக்கு ஒவ்வொரு விதமான வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 6 வயது முதல் 15 வயது வரையிலான யானைகளுக்கு இலகுவான வேலைகளும், 15 வயது முதல் 25 வயது வரையிலான யானைகளுக்கு கொஞ்சம் கடினமான மரங்களை தூக்கும் வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 25 வயது முதல் 40 வயது வரையிலான யானைகளுக்கு தான் வேலையே அதிகம்.
மிக கடினமான அனைத்து வேலைகளையும் இந்த யானைகள் தான் செய்யவேண்டும். அதன் பின்னர் மீண்டும் கொஞ்சம் பணி சுமை குறையும். 58 வயதானால் போதும். ராஜ மரியாதை தான். அரசாங்க வேலையில் இப்போது 58 வயதினருக்கு ஓய்வு கொடுப்பது போல் இந்த யானைகளுக்கும் ஓய்வு கொடுப்பது இப்போதும் நடைமுறையில் உள்ளது. பின்னர் முகாமிலேயே பராமரிக்கப்படும். எந்த வேலையும் கொடுப்பதில்லை. மற்ற யானைகளுக்கு போல் அவ்வப்போது தேவையான உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படும். முகாமில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடக்கும் போது மட்டும் இந்த யானைகளுக்கு முதல் மரியாதை உண்டு. இந்த முகாமில் அதிக ஆண்டுகள் வசித்த யானை ரதி. 77 வயதை கடந்து கடந்த 10 நாட்களுக்கு முன் மரணம் அடைந்தது. தற்போது 68 வயதான பாமா முகாமில் ஓய்வெடுத்து வருகிறது.
வனப்பாதுகாப்பு சட்டம் 1927ல் அமலுக்கு வந்த பின்னர் மரங்கள் வெட்டுவது குறைந்தது. அதன் பின்னர் முகாமில் வளர்க்கப்படும் யானைகளை சவாரிக்கு பயன்படுத்துவது, வனக்கொள்ளைகளை தடுப்பது, காட்டு யானைகளால் தொல்லை ஏற்படும் பகுதிகளுக்கு அழைத்து சென்று விரட்டியடிப்பது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மொத்தம் 24 யானைகள் உள்ளன. இதில் 1972ல் ஒரே யானைக்கு பிறந்த இரட்டையர்கள் சுஜய், விஜய் ஆகியோரும் அடக்கம்.
தென்னிந்தியாவில் உருவான முதல் யானை முகாம் என்பது பலர் அறியாத விஷயம். 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது.
வேடர்கள் தங்கிய வேடந்தாங்கல் பெயர் காரணம்!
ஆங்கிலேயர் காலத்தில் அங்கு வேடர்கள் தங்கி பறவைகளை வேட்டையாடினர். அதன் காரணமாக வேடந்தாங்கல் என்று பெயர் வந்தது.
அதன் பிறகு பறவைகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டது.
இப்போதும் வேடந்தாங்கல், மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பறவைகளை வேட்டையாடுவது, துன்புறுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவது இல்லை.
பறவைகள் பயப்படும் என்பதால் வேடந்தாங்கல் மக்கள் தீபாவளிக்கு பட்டாசு கூட வெடிப்பது இல்லை.
பறவைகளின் எச்சம் கலந்த ஏரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
Monday, 23 September 2013
முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக மாறியது எப்படி?
கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்ததில் விஜய நகர பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சி காலத்தில் தனது பகுதிகளை ஆறு ராஜ்ஜியங்களாக பிரித்து அந்த பகுதிகளை ஆட்சி செய்ய 6 பிரதிநிதிகளை நியமித்தார். மதுரை ராஜ்ஜியத்திற்கு நாகமநாயக்கரை நியமித்தார். நாகமநாயக்கர் விஜய நகர பேரரசிற்கு உரிய வரிப்பணத்தை செலுத்தாமலும், ஆணைக்கு கட்டுப்படாமலும் இருந்துள்ளார்.
இதையடுத்து நாகமநாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மதுரைக்கு படை எடுத்து சென்று தனது தந்தையை வென்று அவரை விஜய நகரத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விசுவநாத நாயக்கரை மதுரை நகர பிரதிநிதியாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். 1529ம்ஆண்டு முதல் 1682ம் ஆண்டு வரை 8 நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகள் நாயக்கர்களின் ஆளுகையின்கீழ் இருந்து வந்தது.
நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் ஈரோடு, விஜயமங்கலம், நாயக்கன்கோட்டை, சத்தியமங்கலம், அந்தியூர், குன்னத்தூர், பெருந்துறை, கோசனம், கொளாநல்லி, பாலத்தொழுவு போன்ற இடங்களில் கோட்டைகள் இருந்தது. நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் 1609ம்ஆண்டு முதல் 1659ம்ஆண்டு வரை முதலாம் முத்துவீரப்பநாயக்கர் ஆட்சி செய்து வந்தார்.
இவரது ஆட்சி காலத்தில் நிறைய சத்திரங்களை கட்டி வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி வந்தார். இவர்கள் தங்கி செல்ல சத்திரமும், குளங்களையும் அமைத்து கொடுத்தார். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தனது படைகள் தங்குவதற்கும், வழிபோக்கர்களுக்காகவும் சத்திரங்களை கட்டினார். மேலும் ஒரு குளத்தையும் அமைத்து கொடுத்தார்.
அவர் ஆட்சி செய்த காலக்கட்டத்தில் வீரப்பன்சத்திரம் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக பெயர் மாறியது. நாயக்கர்கள் அமைத்து கொடுத்த சத்திரங்கள் நாளடைவில் அழிந்து போனது. நாயக்கர்கள் ஆட்சி செய்ததற்கு அடையாளமாக இன்றும் வீரப்பன்சத்திரத்தில் தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் குளம் சாட்சியாக உள்ளது.
Sunday, 22 September 2013
இந்து மத கலைக்களஞ்சியம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது!
இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது.
தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்திரம், கலாச்சாரம், கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்துகின்ற சித்தானந்த் சுவாமிகளின் முயற்சியில் இந்த கலைக்களஞ்சிய பணிகள் நடந்துள்ளன.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகம் இந்த திட்டத்துக்கு ஆதரவும் வசதிகளும் செய்துதந்திருந்தது.
இந்த கலைக்களஞ்சியத்தின் சர்வதேச வெளியீட்டு விழாவில் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி, அட்லாண்டா நகரிலுள்ள இந்திய தூதர் அஜித் குமார், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் அன்னா ஹசாரே உட்பட நூற்றுக்கணக்கான மத அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்குகொண்டிருந்தனர்.
இந்தியாவில் இந்த கலைக்களஞ்சியம் ஏற்கனவே தலாய் லாமா அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Saturday, 14 September 2013
36 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய மண்டலத்தை கடந்த வாயேஜர்–1 விண்கலம்!
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களை கண்டறிய ‘வாயேஜர்–1’ என்ற விண்கலத்தை வடிவமைத்தது. இது கடந்த 1977–ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
அன்று முதல் அது விண்ணில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அது பூமியில் இருந்து புறப்பட்ட 36 வருடங்களுக்கு பிறகு சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து கடந்து சென்றுள்ளது.
விண்வெளி வரலாற்றில் மனிதனால் தயாரித்த ஒரு பொருள் சூரிய மண்டலத்துக்குள் புகுந்து பயணம் செய்து கடந்தது இதுவே முதல் முறையாகும். இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
வாயேஜர் விண்கலம் கடும் வெப்பம், மற்றும் குளிர் உள்ளிட்ட தட்ப வெப்ப நிலைகளை தாங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Comments (Atom)