Friday, 12 December 2014

அக்னிசாட்சியாக திருமணம்....... ஏன்?


இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன்.

திருமண உறுதி (நிச்சயதார்த்தம்):

திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.

சடங்கு முறைகள் :

அவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும்.
இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும்.
மணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும். சான்றோர்கள் மஞ்சள், அரிசி தூவி ஆசீர்வதித்து பின் மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும்.

தமிழ்திருமுறை, திருமண தீபம்:

மனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும்.

அம்மை அப்பர் கலச வழிபாடு:

மூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும்.

நவகோள் வழிபாடு:

முழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும்.

முளைப்பாலிகை வழிபாடு:

தமிழ் திருமணங்களில் முளைப்பாலிகை வழிபாடு மிக முக்கியமாக இடம் பெறுமாம் திருமண விழாவில் இறைவனின் திருவுளத்தை அறிந்த கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும்.

மணமக்களை கன்னியர்களாக வரவழைத்தல்:

மணமகள், மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள், முளைப்பாலிகை இவற்றை வணங்க செய்து புண்ணியகவாசம் செய்த நீரை மணமக்கள் மீது தெளித்து புத்தாடை மற்றும் தங்க நகைகளை கொடுக்க வேண்டும்.

மங்கள நான் வழிபாடு:

மங்கல நானை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க வேண்டும். மங்கல நாணில் உள்ள திருமாங்கல்யத்தை மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தை தொட்டு கொண்டு தமிழ் வேத மந்திரம் அல்லது அபிராமி அந்தாதி பாடலை பாட வேண்டும்.


முன்னோர்கள் வழிபாடு:

வந்தவுடன் மணப்பொங்கல் வைத்திருப்பார்கள். அதற்கு பூஜை செய்து விட்டு, முன்னோர்கள் உருவப் படத்தையோ அல்லது அருவமான மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல பொருட்கள் கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்கள் கொண்டு தமிழ் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.

பாத பூஜை:

பெற்றோர்களுக்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும்.

மங்கல நான் ஆகுதி:

அவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்கப்பட்ட மங்கல நாணை குண்டத்தில் அருகில் வைப்பார்கள். திருமந்திரம் ஓதி மணமக்களை தொட்டு வணங்கி தமிழ் வேதியர் திருமந்திரம் ஓதி பெரிய மனிதரிடம் மங்கல, நானை கொடுக்க அவர் மணமகனிடம் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சு இட வேண்டும்.

விளக்கேற்றும் உரிமை, பட்டம் கட்டுதல்:

மணமக்கள் பின்புறம் நாத்தனார்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி நிற்க வேண்டும். தாலி கட்டிய பிறகு மணமகளின் அப்பா, மணமகளின் தாய்மாமன் இவர்கள் மணமகளுக்கு நெற்றியில் பட்டம் கட்ட வேண்டும்.

அக்னி வலம் நிகழ்ச்சி:

மணமகன் சுண்டு விரலோடு மணமகள் சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்னி வலம் வரவேண்டும். காமாட்சி அம்மன் தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு பெண் செல்ல வேண்டும். மணமகளுக்கு பின்னால் முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு சிறுமிகள் செல்ல வேண்டும்.

அம்மி மிதித்தத்தலும் மெட்டி அணிவித்தலும்:

அம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சி அக்னி வலம் வரும் பொழுது மூன்றாவது சுற்றில் நடைபெறும் அம்மி, என்பது கருங்கல்லால் ஆனது. இது உடையுமே தவிர வளையாது. மணமகளானவள் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற இந்த அம்மியை போல் உழைத்து தேய்ந்து உடைய வேண்டுமே தவிர, குடும்ப கௌரவத்தை என் இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன் என்று உறுதி கூறும் நிகழ்ச்சி.

ஆசீர்வாத நிகழ்ச்சி:

வேதியர் தமிழ் வேத மந்திரம் ஓதி மணமக்களுக்கு திருநீறுஇட்டு ஆசீர்வதித்த பின் பெரியோர்கள் தத்தம் குல வழக்கப்படி மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவார்கள். இறுதியில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில் அமர செய்து வாழ்த்துவார்கள்.

Wednesday, 12 November 2014

தாலி கட்டுவது ஏன்?

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.

Wednesday, 22 October 2014

திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு !


திண்டுக்கல் என்றதும் பூட்டு ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்நகருக்கு பன்முகங்கள் இருக்கின்றன. திண்டுக்கல் வரலாற்றின் திசைகள் செல்லும் கோட்டை தலையணை திண்டுபோல் இருப்பதால் இந்நகருக்கு திண்டுக்கல் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.

மேலும் வெங்காயம், நிலக்கடலையின் மொத்தச் சந்தையாகத் இவ்வூர் திகழ்கிறது. இங்கிருந்து பிரியும் சாலைகள் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களோடு இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடமான மலைகளின் இளவரசியான கோடைக்கானல் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 2133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பேரணை, சிறுமலை ஆகிய இரு சிறந்த உல்லாச ஓய்விடங்களும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளன.

திண்டுக்கல் வரலாறு

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படை தளங்களில் ஒன்று .

மலைக்கோட்டை கோவில்

திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் இக்கோவிலை கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத ஆவடைப்பகுதி கருவறைக்கு வெளியே தனியே கிடக்கிறது.

Thursday, 16 October 2014

கணவன் உண்டபின் அதே தட்டிலே உணவு உண்ணச் சொல்வது ஏன் தெரியுமா?

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா? 


அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், 


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

Wednesday, 15 October 2014

வீட்டின் தலை வாசலுக்கான சில வாஸ்து டிப்ஸ்...

எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. மனை சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் பஞ்ச பூதங்கள் இருக்கும் வீட்டில் நல்லது கெட்டதை தீர்மானிக்க வாஸ்து பெரிதும் உதவி புரியும்.


வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும், எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும், எந்த பொருட்கள் வைக்க வேண்டும், எந்த பொருட்களை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியேலே இருக்கிறது. அப்படி தான் வீட்டில் உள்ள தலைவாசல் கதவும். வீட்டின் தலைவாசல் தான் முக்கிய ஆற்றல் திறனை நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறது. அதனை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.



நம் வீட்டில் உள்ள தலை வாசல் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். அட்வான்ஸ்ட் ஃபெங் சூயி மற்றும் வாஸ்து சாஸ்திர ஆலோசகரான டாக்டர். ஸ்னேஹல் எஸ். தேஷ்பாண்டே இதனை பற்றி விலாவரியாக கூறுகிறார். தலைவாசல் என்பது வீட்டின் வாயை போன்றதாகும். இதன் வழியாகத் தான் வீட்டிற்குள் அனைத்து சக்திகளும் உள்ளேறும். அதனால் இது எப்படி இருக்க வேண்டும் என்றும், எப்படி இருக்க கூடாது என்றும் சில விதிமுறைகள் உள்ளது.



 தென் மேற்கு திசை வீடு

தென் மேற்கு திசையில் பார்த்தமாறு இருக்கும் வாசல் கதவை கொண்ட வீட்டை தேர்ந்தெடுக்காதீர்கள். இது தீய சக்திகள் உள்ளேறும் திசையாகும். அதனால் பல போராட்டங்களை சந்தித்து, பல நல்வாய்ப்பை இழக்க நேரிடுவீர்கள். ஆனால் ஃபெங் சூயி சாஸ்திரப்படி, அந்த மாதிரியான வீட்டில் செல்வ செழிப்பு புரளும் யோகம் இருந்தால், முதல் 3-4 வருடங்களுக்கு அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த பணப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதற்கு பிறகு பெரும் வீழ்ச்சியை சந்திப்பார்கள். மேலும் வீட்டின் தலைவாசல் கதவு ஏற்கனவே தென் மேற்கு திசையை நோக்கி இருந்தால், இடது கையில் கதம் வைத்திருக்கும் இரண்டு அனுமான் படங்கள் அல்லது டைல்ஸ் கற்களை கதவின் வெளியே பதித்து, அதன் பின் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள். மஞ்சள் நிற மாணிக்க கல், எர்த் கிரிஸ்டல், ஈயம் போன்ற கற்களும் இந்த பிரச்சனையை தீர்க்க உதவும். குறிப்பாக இவைகளை பயன்படுத்தும் முன் வல்லுனர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. இருப்பினும் இவ்வகை வீட்டை தவிர்ப்பதே நல்லது.


 தென் கிழக்கு திசை வீடு

தென் கிழக்கு திசையை நோக்கியுள்ள தலைவாசல் கதவு இருந்தால், உடல்நல குறைவு, கோபம், வழக்குகள் போன்றவைகள் உள்ளேறும். இவ்வகை வீடுகளில், தலைவாசல் கதவுகளின் வெளிப்பக்கமாக காயத்ரி மந்திரம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டுங்கள். உரிய ஆலோசனையோடு கோரல், மஞ்சள் மாணிக்க கல் மற்றும் செம்பு போன்ற கற்களை பயன்படுத்தி, இந்த கதவின் குறையை சற்று குறைக்கலாம்.

 
 தெற்கு பார்த்த வீடு

தெற்கை நோக்கி அமைந்துள்ள தலைவாசல் கதவுகள், கூரிய சக்தியை உள்ளே கொண்டு வரும். இது வீட்டிலுள்ள நேர்மறையான சக்தியை சீர் குலைக்கும். இவ்வகை கதவுகள் இருந்தால், பொது வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்கும். சில நேரம் சண்டை மற்றும் வாக்குவாதத்திலும் இழுத்து விடும். இந்த பிரச்சனைக்கும், மேற்கூறிய படி அனுமான் படம் பதித்த படத்தையோ, டைல்ஸ் கற்களையோ கதவுகளின் வெளிப்பக்கமாக பதித்து விடுங்கள். ஈயம் மற்றும் பூனைக் கண் கிரிஸ்டல்களை பயன்படுத்தி, இதிலிருந்து சற்று பாதுகாக்கலாம். ஆனால் இந்த கதவு நான்காம் படவில் இருந்தால், குடியிருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.


 மேற்கு பார்த்த வீடு

மேற்கு திசையை நோக்கி தலைவாசல் கதவு அமைந்திருந்தால், அது சுறுசுறுப்பான திறனையும், கொண்டாட்ட திறனையும் அளிக்கும். அதனால் இளைஞர்களுக்கு இது மிகவும் நல்லதாக அமையும். அதனால் தான் ஜப்பானில் உள்ள கெய்ஷா வீடுகள் அனைத்தும் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

 வடமேற்கு திசை வீடு

வடமேற்கு திசையை நோக்கி அமைந்திருக்கும் தலைவாசல் கதவுகளினால், பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. இதனுடன் சேர்ந்து மற்ற வாஸ்து விதிமுறைகள் படி வீடு இருந்தால், ஆரோக்கியம், பொருள் வளம், செல்வம் என அனைத்தும் பெருகும். இதில் இருக்கும் ஒரே குறை, வாசல் கதவு மேற்கை நோக்கி இருந்தால், வீட்டின் முதன்மையான ஆண் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். அதே போல் வடக்கை நோக்கி இருந்தால், இது பெண்ணுக்கு பொருந்தும்.


குறிப்பு


பொதுவாக கிழக்கு , வடக்கு, வட கிழக்கு போன்ற திசைகளை நோக்கி இருக்கும் தலைவாசல்கள் தான் நல்லது. இருப்பினும் இழுவை, அளவு குறைப்பு, நிலத்தடி நீர் தொட்டி, ஃபெங் சூயி போன்றவைகளால் தான் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும், பொருள் வளமும் அடங்கியுள்ளது.


Wednesday, 6 August 2014

இடது பக்க போக்குவரத்து!















ந்தியாவின் சாலை போக்குவரத்தில், வாகனங்கள் சாலையின் இடது புறம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும், ஒரு சில நாடுகளைத் தவிர சாலைப் போக்குவரத்து இடது புறமாகவே உள்ளது. இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்த்தால் நாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி போக வேண்டும்.


இங்கிலாந்தின் முதல் விக்டோரியா மகாராணி காலத்தில் இந்த பழக்கம் வந்தது. அப்போது அரச குடும்பத்தினரும், நிலச்சுவான்தாரர்களும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளில் போவது வழக்கம். இந்த வண்டிகளில் குதிரை ஓட்டுபவர் வண்டியின் வலது புறம் உட்கார்ந்திருப்பார். இது குதிரைகளை கையாளுவதற்கு வசதியாகவும், சுலபமாகவும் இருந்தது. மேலும் அதுவே ஒரு பாரம்பரிய மரபாகவும் மாறியது.



குதிரைகளை அதட்டி ஓட்டுவதற்கு கையில் உள்ள நீளமான சவுக்கை சுழற்றும் போது, அது சாலை ஓரத்தில் உள்ள மரக்கிளையில் சிக்கி சிறு சிறு விபத்துகள் ஏற்படுவதுண்டு. மேலும் அரச குடும்பத்தினர் பயணம் செய்யும் போது சவுக்கு சிக்கிக் கொண்டால், கால தாமதத்திற்கும், அரசரின் கோபத்திற்கும் ஆளாக நேரிட்டது. இதனால் சவுக்கு, சிக்காத அளவுக்கு வலது புறம் இடம் விட்டு சாலையில் இடது புறம் வண்டியை செலுத்தினார்கள்.
பின்பு பல ஆண்டுகள் கழித்து மோட்டார் வாகனங்கள் அறிமுகப்படுத்தபட்டவுடன், இதே முறை நடைமுறை படுத்தப்பட்டது. இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளில் இதே சாலை விதிமுறை கடைபிடிக்கப்பட்டது.



இப்போது உலகில் பெரும்பான்மையான நாடுகளில் இந்த முறைதான் நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டுமே வலது புறத்தில் வாகனங்கள் செல்லும் விதி இருக்கிறது. அதனால் தான் அமெரிக்க வாகனங்களில் டிரைவர்களின் இருக்கை வலது புறத்தில் உள்ளது.
இந்தியாவில் இருந்து செல்பவர்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே அமெரிக்காவில் வாகனங்கள் ஓட்ட முடியும். ஏனென்றால் இடது புறம் ஓட்டி பழக்கப்பட்டவர்கள் வலது புறம் ஓட்டுவது சிரமம்.

Tuesday, 22 July 2014

புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாறு !



தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இன்றும், மன்னராட்சி இருந்ததற்கான சுவடுகளோடு காட்சியளித்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை, தொல்லியல் மற்றும்

வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொடும்பாளூர், நார்த்தமாலை, குடுமியான் மலை, குன்னாண்டனார் கோயில், சித்தன்ன வாசல், திருமயம், ஆவுடையார் கோயில் போன்ற

தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், சங்கப் பாடலிலும் இடம் பெற்றுள்ளது. ஜனவரி 14, 1974ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை

(புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது.

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து

வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச்

சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள்,

அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள்

சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம்.

இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள்,

கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக

உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து

சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக்

குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க

காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.


Thursday, 19 June 2014

கடலூர் மாவட்டத்தின் வரலாறு!


கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருகிறது. இங்கு நீர்வளம், ஏரிகள், கனிவளம், வேளாண்மை, ஆலைகள், மின்சார தொழில்,கடல் சார்ந்த தொழில்கல்ளும் ,செயிண்ட் டேவிட் கோட்டை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்ற பல சுற்றுலா தளங்களும் அமைந்துள்ளது...

சிதம்பரம் :

சிதம்பரத்தை 'தில்லை' என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது.சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது.படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பல மன்னர்களின் திருப்பணியைக் கண்ட கோயிலாதலால் இங்கு அவரவர் கால கலை நுட்பங்களைக் காணலாம். நடனக் கலையில் அடவுகள் இங்குள்ளது போல அவ்வளவு அழகாக வேறு எங்கும் காண முடியாது. பிரகார மண்டபங்களில் நாயக்கர் கால ஓலியங்களைக் காணலாம். இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில் நின்று காணலாம்.

பிச்சாவரம் :

சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம், இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலாதுளமாகும்.கல்கத்தாவி லிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம். சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது. இயற்கையழகு உள்ள இடமாதலால் வெளிநாட்டினரை வெகுவாக கவர்கிறது. படகில் ஏறி சுற்றிப்பார்க்கத் தொடங்கினால் இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை மரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை அழகை காணலாம். காடு முழுவதும் சுற்றிப் பார்க்க கால்வாய் வசதியாக இருக்கிறது. அரசுபடகுகளும், தனியார் படகுகளும் உள்ளன. இவ்விடம் தனித்தனி தீவுப் பிரதேசம் ஆகையால் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு ஏற்ற பயணியர் விடுதிகள் உண்டு. இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு மையம் ஒன்று உள்ளது.

பாடலீஸ்வரர் கோயில்

கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கில் 1 கி.மீ தொலைவில் பாடலீசுவரர் கோவில் என்கிற பெரிய கோவில் உள்ளது.திருப்பாதிரிப் புலியூரில் அமைந்துள்ள தொன்மையான சிவத் தலமிது.இங்குள்ள பிடாரியம்மன் சன்னதியும் பிரபலமானது.பிரம்மோத்ஸவம் சிறப்பாக கொண்டாடபடுகிறது.அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, 'சொற்றுணை வேதியன்' என்னும் பதிகம்பாடி,அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் 'கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரில் உள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

வடலூர் :

கடலூர்-விருத்தாசலம் சாலையில் வடலூர் அமைந்துள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்கசுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை,தாமரை வடிவில் எண்கோண முடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் 'ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் 'சித்திவளாகம்' என்பது பெயர்.

திருவயிந்திரபுரம் :

திருப்பதியில் உறையும் பெருமாளைச் சின்னவர் என்றும், திருவயிந்திரபுரத்தில் உரையும் தேவநாதப் பெருமாளைப் பெரியவர் என்றும் சொல்வர். திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் இந்த வைணவத் தலம் அமைந்துள்ளது. வேதாந்த தேசிகரால் பாடல் பெற்றத் தலம். ஒவ்வொராண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ' இராப்பத்து பகல்பத்து' உச்சவம், 'சொர்க்க வாசல் திறப்பு விழா' சிறப்பாக நடைபெறும்.

ஸ்ரீமுஷ்ணம்

சுயம்பு வடிவில் உள்ள எட்டு திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவராகசாமி கோயில் இங்குள்ளது. ரதம் போன்ற வடிவிலான புருஷஷ்குத மண்டபத்தில் போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இதைக் காணக் கண் கோடி வேண்டும். இந்நகர் கடலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பண்ருட்டி:

பலாப்பழம், முந்திரிபழம், முந்திரிக்கொட்டை, முந்திரிப்பயறு, முந்திரி எண்ணெய் போன்றவைகளுக்கு பண்ணுருட்டி பெயர் பெற்றது. மிக முக்கியமான மொத்த சந்தையுள்ள வணிகத்தலம். வடக்குத்துக் கிராமத்தில் பேப்பர் மில் ஒன்று, கங்கா பேப்பர் மில் என இயங்கி வருகிறது.

காட்டு மன்னார்குடி

சிதம்பரம் வட்டத்திலுள்ள சிறு நகரம். இங்குள்ள பெருமாள் கோயில் மிகப் பழமையானது. வைணவத் துறவிகளான நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோர் பிறந்த இடம். இதுவே காட்டு மன்னார்குடியின் தனிச்சிறப்பு.

கெடிலத்தின் கழிமுகம் :

கெடிலநதி கடலூருக்கருகில் மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாகும். கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகக் கவர்ச்சியும் அழகும் வாய்ந்தது. மாலை வேளையில் மக்கள் இங்கு பொழுது போக்குவதற்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. சென்னை மரினா கடற்கரை போன்று இது நீளமில்லாவிட்டாலும் அகன்ற மணற் பரப்பைக் கொண்டது. சோலைகள் நிறைந்த சூழ்நிலையும், கடலோடு ஆறு கலக்கும் கண்கவர் காட்சியும் இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கவுண்டி கடற்கரை' போன்றதென்று புகழப்படுகிறது.

நெய்வேலி :

கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் நெய்வேலி அமைந்துள்ளது.நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி போலவே முந்திரியும் விளைகிறது.1961- ஆகஸ்ட் 24ம் நாள் லிக்னைட் படிவமத்தின் முதன் முதல் காட்சி. நிலக்கரியால் லாபமில்லை என்றதனால் அதை எரித்து அந்த வெப்பசக்தி கொண்டு, மின்விசை உற்பத்தி செய்வதால் லாபம் என உணரப்பட்டு மின்விசை நிலையம் அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிக அளவு பழுப்பு நிலக்கரி இங்குதான் வெட்டியெடுக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு நெய்வேலி மின்சாரம் மூலம் வெளிச்சமும் தருகிறது. உரமும் தயாரிக்கப்படுகிறது.

கடலூர் துறைமுகம் :

கடலூர் முதுநகரில் உள்ளது.கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும்.அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது. இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி. கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி.இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம் பரங்கிப் பேட்டையில் உள்ளது.இன்றும் படகுகள் வந்து போகின்றன.

பரங்கிப்பேட்டை

இங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். அடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது. இங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள். மாலுமியார் அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.

தில்லை காளி கோயில்

மிகப் பழமையான கோயில் கடலூர் நகரின் வட திசை எல்லையில் இது அமைந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் ஆண்ட கப்பேருஞ்சன் என்ற மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. பக்தர்கள் நாடும் நற்கோயில்.

பஞ்ச சபைக் கோயில்கள்

சிவபெருமான் தன் பிரபஞ்ச நடனத்தை திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும் (சிற்சபை) சிதம்பரத்தில் உள்ள பொற்சபையிலும் மதுரையில் உள்ள வெள்ளியம்பலத்திலும் திருநெல்வேலியில் உள்ள தாமிர சபையிலும் குற்றாலத்தில் உள்ள சித்திர சபையிலும் ஆடினார். இச்சபைகள் உள்ள கோயில்களே பஞ்ச சபைக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

விருத்தாச்சலம்

மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்த நகரம். இங்குள்ள விருத்தகிரிஸ்வரர் ஆலயம் பழமை வாய்ந்தது. மாசிமகத் திருவிழாவில் யாத்ரிகர்கள் மணிமுத்தாறு நதியில் புனித நீராடுவர். கடலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

நடனக்கலையின் தலைவன் நடராஜன். அவன் ஆடும் நாட்டியம் பிரபஞ்ச இயக்கம். இதன் அடிப்படையில் நடராஜபெருமானுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்படும் விழா இது. இந்த விழா மகா சிவராத்திரி ஐந்து நாட்களும் நடைபெறுகிறது. பல நடனக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நாட்டியத்தின் மூலம் நடனக் கடவுளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

கடலூர் தீவு :

உப்பனாற்றிற்கும், கடலூக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலூம், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு-தெற்கு எல்லைகளாகக் உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக்கழிமுகத் தீவு 'அக்கரை' என அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி என்றும் மூன்று சிற்றுர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும்.போக்குவரத்திற்குப் படகு வசதி உண்டு.

பஞ்சபூதத் தலங்கள்

சிவபெருமானின் ஐந்து பண்பு நலன்களை எடுத்துக் காட்டும் ஆலயங்களே பஞ்சபூதத் தலங்கள் எனப் புனிதமாகக் கருதி மக்கள் வழிபடுகிறார்கள். சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ஆகியவையே பஞ்சபூதத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

செயிண்ட் டேவிட் கோட்டை :

கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதிக்கும், அதன் வடகிளைக்கும் நடுவே, தேவனாம்பட்டினம் என்னும் சிற்றுர் உள்ளது. இந்தத் தேவனாம் பட்டினத் தீவில் கடற்கரையையொட்டி கெடிலத்தின் வடகரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'செயிண்ட் டேவிட் கோட்டையைப் பாழடைந்த நிலையில் இன்றும் காணலாம். கோட்டை உள்ள தீவின் முக்கியத்துவத்தை டச்சுக்காரர்களே முதலில் உணர்ந்தனர். இக்கோட்டை 1683-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் :

1920-ஆம் ஆண்டு மீனாட்சிக் கல்லூரியாக இருந்தது. தமிழரின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்ட தமிழ்துறை ஏற்படுத்தப்பட்டது.1929-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக உயர்ந்தது. ராஜா சர்.முத்தையாச் செட்டியாரின் தந்தை அண்ணாமலை செட்டியாரால் உண்டாக்கப்ட்டது. அவர் பெயரில் அமைந்த நகரில் கடற்கரைக்கு 5 கி.மீ தொலைவில் அமைதியான, இயற்கையோடு இயைந்த சூழலில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இருக்கிறது. 1,25,000 மேற்பட்ட நூற்களைக் கொண்ட பெரிய நூலகம் இருக்கிறது. இங்குள்ள தமிழ்துறையில் தமிழகத்தின் சிறந்த தமிழறிஞர்கள் அனைவரும் பணியாற்றியுள்ளனர். எ-கா பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார், போன்றோர் தமிழிசை விழிப்புணர்விலும், இந்திப் போராட்டத்திலும் பெரும்பங்கு இப்பல்கலைக் கழகம் வகித்தது.

நெல்லிக்குப்பம் :

முஸ்லீம்கள் நிறைந்த ஊர். இங்கு ஈ.ஐ.டிபாரி நிறுவனத்தாரால் நடத்தப்படும் சர்க்கரை ஆலை ஒன்றும், மிட்டாய் தொழிற்சாலையும் உள்ளன. கரும்பு உற்பத்தி இவ்வட்டத்தில் அதிகம். அதுபோல வெற்றிலை, அகத்திக்கீரை, அவுரிஎண்ணெய் முதலியவை இங்குப் பெயர் பெற்றவை.

பரூர் :

விருத்தாசலத்திற்கு வடமேற்கில் உள்ளது இவ்வூர். இங்குள்ள சர்சில் மாதாவின் சிலையும், கிறிஸ்துவின் சிலையும் மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்டவை. இவை மரத்தாலானவை. சிறப்பாக வண்ணம் தீட்டப்பெற்றவை, அதில் இந்திய அணிகலன்கள் இருப்பது சிறப்பு.

சிப்காட் தொழிற்கூடம் :

சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் புதுநகர் :

சென்னைக்கு நேர் தெற்கே 100 மைல் தொலைவிலுள்ளது. மஞ்சக் குப்பம்,புதுப்பாளையம், தேவனாம்பட்டணம், வில்வராய நத்தம், வன்னியர் பாளையம் முதலிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டது. கெடிலம் ஆறு கடலூர் நகரைச் சுற்றியும், நகருக்கு நடுவேயும் ஓடுகிறது. நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் நீதிமன்றம், கல்வி, மருத்துவ நிலையங்கள் அரசு அலுவலகங்கள் இங்குள்ளன. வணிகத் தலமாகவும் இது இருந்து வருகிறது.